அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்பிற்கு அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் வாழ்த்து தெரிவித்தார்.
மதுரையில் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கோ.புதூரில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டு பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து டாக்டர் பா.சரவணன் கூறுகையில்
“அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்காக அம்மா உணவகங்களை தொடங்கினார். தமிழகத்தை தொடர்ந்து வட மாநிலங்களில் வெற்றிகரமாக அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்பட்டன. அம்மா உணவகங்களை மேம்படுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அம்மா உணவக பணியாளர்களுக்கு ஊதியங்கள் நிலுவையில் உள்ளது. குறைந்த அளவில் உணவுகள் தயார் செய்யப்படுகிறது. மேலும், அம்மா உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் நல்லெண்ணம் அடிப்படையில் அதிமுக திட்டங்களை செயல்படுத்துகிறார். திமுக மற்றும் அதிமுக திட்டங்களை முதலமைச்சர் விஜய் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், மக்கள் நல திட்டங்களை முதலமைச்சர் விஜய் செயல்படுத்துவார் என நம்புகிறேன்.
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் அம்மா உணவகங்கள் செயல்படுத்தலாம். முதலமைச்சர் ஜோசப் விஜய் மக்களுக்காக உழைக்க நினைக்கிறார். மக்களுக்கான திட்டங்களை தமிழக அரசு செய்கிறது, அதை தான் பாராட்டுகிறோம். நான் மட்டுமல்ல அனைவரும் முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகளை பாராட்டாலாமே. நல்ல விஷயங்களுக்களை பாராட்ட அனுமதி பெற தேவையில்லை. விஜய் தேர்தலில் வென்று விட்டார், மக்கள் மனதை வெல்வாரா? என பொறுத்து இருந்து பார்ப்போம்.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான், அவர் தலைமையை ஏற்கிறேன். தவெகவின் வெற்றியை ஒரு தேர்தலில் தீர்மானிக்க முடியாது. சினிகா நடிகர்கள் பிற மாநிலங்களில் வெற்றி பெற முடியாத நிலையில் தமிழகத்தில் விஜய் ஒரே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்” என கூறினார்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
