திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றி வழிபட அரசு ஏற்பாடு செய்யவேண்டும்’.திருவண்ணாமலை ஆதினம் கருணாநிதி சுவாமிகள் கோரிக்கை..!
திருவண்ணாமலை, மே.-
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலையில் உள்ள ஆதீனம் மடத்தில் சாதுக்கள், சன்னியாசிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணா மலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான சாதுக்கள், சன்னியாசிகள், பொதுமக்கள், இந்து மதத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்து மதத்தில் இருந்து மாற்று மதத்திற்கு மாறிய மக்கள் மீண்டும் தாய் மதம் திரும்புதல் குறித்து விரிவாக பேசப்பட்டது. முன்னதாக மடத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு கருணாநிதி சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்து மக்களின் ஆதரவோடு தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு திருவண்ணாமலை ஆதீனம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு இந்து சமய பற்று உள்ள அறநெறி பண்பாளர் ஒருவரை அமைச்சராக நியமனம் செய்ய வேண்டும். இந்துமத பண்டிகையான மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தைப்பூசத் திருவிழா நாட்களை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றி வழிபட தமிழக அரசு உடனடியாக வழிவகை செய்ய வேண்டும். துறவிகள் மற்றும் ஆதினங்களுக்கு சமூகத்தினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை நீக்கி அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில்களில் கட்டணம் வசூலிப்பதை முழுமையாக ரத்து செய்து, பொதுமக்களை இலவசமாக தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
தொடர்ந்து வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 60 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் கர் வாப்சி (தாய் மதம் திரும்புதல்) மக்களைத் தேடி நடை பயணம் செய்ய உள்ளதாக கருணாநிதி சுவாமிகள் தெரிவித்தார்.
