மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் விந்தியா
திமுகவின் கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக வரிசையாக தாக்கு
மதுரை வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து அதிமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் விந்தியா மதுரை பீ.பீ.குளம் பகுதியில் வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அவர் கூட்டத்தில் பேசும்போது:
தூங்கா நகரம் என்று இருந்த மதுரை மாநகரம் குப்பை நகரமாக உள்ளது. மதுரையில் காட்சி மாற வேண்டுமென்றால் ஆட்சி மாற வேண்டும். வைகை என்றால் அழகர், தண்ணீர் வருகிறதோ இல்லையோ அழகர் வருவார். வைகை ஆற்றை சுத்தமாக வைக்காமல் குப்பையாக வைத்திருக்கிறது இந்த மாநகராட்சி. மதுரைக்காரர்கள் நியாயமானவர்கள், வீரமானவர்கள், உங்களிடம் தப்பு செஞ்சு யாரும் தப்பிக்க முடியாது. இந்த மதுரை மக்கள் அநியாயம் செய்தவர்களை தட்டிக் கேட்கணும் வருகிற தேர்தலில் இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்.
அதிமுக ஆட்சி வந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் காட்சி மாறும். இந்த மதுரை மீண்டும் சுத்தமான சுகாதாரமான மதுரை ஆகும். ஐந்து வருடத்துக்கு முன்னாடி பொய்யான வாக்குறுதிகள் குறித்து ஏமாற்றினார்கள் இப்போது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் ஏமாற மாட்டார்கள். ஏழு நாட்களாக பிரச்சாரம் செய்கிறேன். இரட்டை இலைக்கு ஆதரவாக மக்கள் குரல் எழுப்புகின்றனர். ஒத்த ஆளாக நின்று மொத்தமாக வெல்கின்ற அர்ஜுனன் நம்ம அண்ணன் எடப்பாடியார்.
காங்கிரஸ் எல்லாம் இனி தமிழ்நாட்டில் தேறும்மா? 50 வருடம் ஆச்சு “காணவில்லை” என போஸ்டர் ஒட்டியாச்சு. நீட் தேர்வு, ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையினர் அத்துமீறல் என தமிழகத்தில் யார் சொத்தாலும் கவலைப்படாதவர்கள் காங்கிரஸ்காரர்கள். அவர்களை திமுக கூட்டணியில் வைத்துள்ளது.
பாட்ஷா படத்தில் ரஜினி பஞ்ச் டயலாக் பேசுவார் அப்போது அவருடன் ஒரு நாய் இருக்கும் அந்த நாய் எதுக்கு இருக்கு என்று யாருக்குமே தெரியாது அதுபோல் திமுகவுடன் காங்கிரஸ் இருக்கிறது எதுக்கு என்று யாருக்கும் தெரியாது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், பாலியல் வன்கொடுமை நடந்தால் சென்னையில் உள்ள பொம்மை போல இருப்பார். அதே ஈரான் போர் வந்தால் கொதித்து விடுவார், இவர் முரட்டு பீசு என்றால் அங்கு ஒரு முத்திப்போன பீஸ் உள்ளது. அதுதான் கமலஹாசன் அவர் எதற்காக அரசியலுக்கு வந்தார் என்று யாருக்குமே தெரியாது. அரசியலுக்கு வரும்போது வாரிசு அரசியல் கூடாது என்றார். அவர் அன்றைக்கே ஸ்டாலினுடன் சேர்ந்திருந்தால் ஒரு டிவியும் ஒரு டார்ச் லைட்டும் மிச்சமாயிருக்கும்.
பாலியல் வன்கொடுமை கந்துவட்டி கொடுமை இதற்கெல்லாம் வாய் திறக்காமல் ஈரான் போரை நிறுத்த சொல்லி அமெரிக்க ஜனாதிபதிக்கு லெட்டர் எழுதுவாராம் தேவை இல்லாத ஆணியை புடுங்குறவர் தான் கமலஹாசன். அவரை பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது. உலகநாயகன், 50 வருடம் சினிமாவை ஆண்ட ஆஸ்கர் நாயகன். அவருக்கு இரண்டு சீட்டு இல்லையாம். ஆனால் கருணாசுக்கு ஒரு சீட்டு. சப்பானிக்கு சீட்டு இல்லை லொடுக்கு பாண்டிக்கு சீட்டு. இவங்க எல்லாம் ஒரு பக்கம் என்றால் இன்னொருத்தர் அதற்குப் பெயர் மதிமுக. மதிமுக என்றால் மானங்கெட்ட திமுக. அவர் வாரிசின் ஒரு சீட்டுக்காக மொத்த கட்சியும் அடகு வைத்து விட்டார். அவரை நான் வைகோ என்று கூப்பிடவில்லை அவர் சைக்கோ.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்றைக்கு உண்டியல் வைக்க முடியாத நிலை சேகர்பாபு தூக்கி சென்று விடுவார். ஜீவானந்தம் கட்டி காத்த கம்யூனிஸ்ட் அறிவாலயத்தின் கையேந்துகிறது.
இதற்கு எல்லாத்துக்கும் மேல தே.மு.தி.க தம்பி எம்பி சீட்டுக்காக கட்சியை ஸ்டாலின் உடன் இணைத்து விட்டார்கள் அரை சதவீதம் ஓட்டு இல்லாதவர்கள் ஆனால் என்னமா வியாபாரம் செய்கிறார்கள். கணவர் இல்லாத கட்சியை நல்ல வியாபாரம் செய்கிறார்கள் அண்ணியாரின் வியாபாரத்தை நாம் பாராட்ட வேண்டும். பத்து வருடமாக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு சீட்டு வழங்காமல் அண்ணியாருக்கு சீட்டு வழங்கி விட்டு குஷிப்படுத்தி உள்ளார் ஸ்டாலின். ஏன் சார் தேமுதிகவிற்கு 10 சீட்டு கொடுத்தீர்கள் ஏன் என்று கேட்டால், அவங்களும் நம்மளும் ஒரே மணவாடு அவங்களும் தெலுங்கு நம்மளும் தெலுங்கு என்று சொன்னாராம். இந்த கூட்டணி தமிழ்நாட்டில் தேருமா? மக்கள் நாங்கள் முட்டாள்கள் இல்ல முதலாளிகள் என்று நிரூபிக்க வேண்டும்.
திமுக காரர்கள் காசு கொடுப்பேன் என்று சொன்னாலே கொடுக்க மாட்டார்கள் இதில் கூப்பன் வேற கொடுக்கப் போறாங்களாம். அதை வைத்து பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கிக் கொள்ளலாமா அவர்கள் கொடுக்கும் கூப்பன் ஆடி தள்ளுபடியில் போது கொடுக்கும் கூப்பன் போல் இருக்கும்.அதில் கீழே சின்ன கண்டிஷன் போட்டுயிருப்பார்கள் 2031 வரை திமுக ஆட்சியில் இருந்தால் இந்த கூப்பன் செல்லும் தகுதியானவர்களுக்கு மட்டும் இந்த கூப்பன் தரப்படும் என மக்களை ஏமாற்றுவார்கள். காலை கடனை கூட தள்ளுபடி செய்வோம் என்று சொல்வார்கள் திமுக காரர்கள் ஆனால் அதையெல்லாம் தள்ளுபடி செய்ய மாட்டாங்க கொடுத்த வாக்குறுதிகளை தள்ளுபடி செய்வார்கள். நன்றாக யோசித்து இந்த முறை அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள். நாங்கள் திமுகவை தள்ளுபடி செய்வோம் நீங்கள் நிம்மதியாக வாழலாம்.
போன முறை கூறினேன் இந்த மக்கள் நம்பவில்லை இந்த முறை வாக்களியுங்கள் திருடனை கூட நம்பலாம் திமுக காரனை நம்ப முடியாது.
