காஞ்சிபுரம் சிலம்பாட்ட கழகம் சார்பாக சிலம்ப போட்டி
தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர் வளசை முத்துராமன் ஜி தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் ஆகஸ்ட்
காஞ்சிபுரம் சிலம்பாட்டம் சார்பாக ராசி பொறியியல் கல்லூரி வஞ்சுவாஞ்சேரி படப்பையில், மினி சப் ஜூனியர்,சப் சீனியர், ஜூனியருக்கான சிலம்ப போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இந்திய சிலம்ப சம்மேளன தலைவரும், தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவருமான வளசை முத்துராமன் ஜி சிலம்பாட்ட போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் :- 1980-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலம்பாட்ட கழகமானது
ஐயா பி.கே. முத்துராமலிங்கம் அவர்களால் தொடங்கப்பட்டு, அப்பொழுது முதலமைச்சராக இருந்த பொன்மன செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அங்கீகரிக்க பெற்று அன்று முதல் இன்று வரை உள்ள தமிழக முதலமைச்சர்களால் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்திற்கு பல சலுகைகள் வழங்கி வருகிறார்கள்.
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக அரசானது தேர்தல் அறிக்கையில் சிலம்பத்திற்கு சீருடை பணியில் 10% இடம் ஒதுக்குவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதுபோல் ஆட்சி அமைந்த உடன் இடஒதுக்கீடு செய்தார்கள். அதுபோல் எனது தலைமையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் சார்பாக துணை முதல்வர் உதயாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பத்திற்கு அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி அவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்து இருந்தேன். அவர் உறுதியளித்தபடி குரூப் 4 தேர்வில் சிலம்பத்தை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். எனவே எனது சார்பாகவும் சிலம்ப ஆசான்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனாலும் தமிழக அரசனது 2022-23 ஆம் ஆண்டு முதல்வர் கோப்பை போட்டியில் தமிழரின் வீரக் கலையான சிலம்பம் கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, ஒற்றை சுருள் வால் வீச்சு, மான் கொம்பு வீச்சு, இரட்டை கொம்பு வீச்சு என்று சேர்த்து வைத்திருந்தார்கள். ஆனால் 2024 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளாக சிலம்பத்திற்கு வந்த சோதனையோ என்னவோ தெரியவில்லை. முதல்வர் கோப்பைக்கான போட்டியில் முதலில் ஐந்து விளையாட்டை சேர்த்து இருந்தார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு விளையாட்டு மட்டுமே முதல்வர் கோப்பையில் சேர்க்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டு எல்லாம் நம் தமிழ்நாட்டிலும் இந்தியாவில் வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய கலையான இந்த ஐந்து விளையாட்டையும் முதல்வர் கோப்பை விளையாட்டில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அதற்குண்டான அறிவிப்பு வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் விளையாட்டுக்களை நான் குறை கூறவில்லை. தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பேசினார்.
இதில் ராசி பொறியல் கல்லூரி சேர்மன் டாக்டர் எஸ்.ரங்கநாதன், காவல் ஆய்வாளர் டில்லிபாபு, மாவட்ட செயலாளர்
லட்சுமனன், உலக சிலம்ப ஆசான் முருகக்கனி, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பிரபாகரன், கிறிஸ்டினா திரவியம் ,பாண்டியராஜன், கார்த்திக்குமார், பழனிச்சாமி,சண்முகம் வெங்கடேசன், பாலகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
