மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் படைவீரர்கள் கோரிக்கை மனு..!
மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள ஜவான் பவன் கட்டிடத்தை முழுமையாக சீரமைத்து தர கோரிக்கை..!
மதுரை, ஜூன் 08
மதுரை மாவட்ட அனைத்து முன்னாள் படைவீரர்கள் சார்பில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் படைவீரர்கள், மதுரை ரயில் நிலையம் அருகே முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்கும் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள “ஜவான் பவன்” கட்டிடம் கடந்த பல ஆண்டுகளாக முழுமையாக பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த கட்டிடம் முன்னாள் படைவீரர்கள், பிற மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர், தற்போது பணியில் உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி பயன்பாடின்றி இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் கொடிநாள் விழாவின்போது, ஜவான் பவன் கட்டிடத்தை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்து வருவதாகவும், ஆனால் இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
எனவே, மதுரை ஜவான் பவன் கட்டிடத்தை முழுமையாக சீரமைத்து, முன்னாள் படைவீரர்கள் பயன்பெறும் வகையில் விரைவாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் மனுவாக வழங்கியுள்ளதாகவும், விரைவில் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்ததாகவும் முன்னாள் படைவீரர்கள் கூறினர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
