மதுரை மேலக்குயில்குடி சீரடி சாய்பாபா மலைக்கோயிலில் திருவண்ணாமலை ஆதீனம் சார்பில் வேல் வைத்து யாக வேள்வி
மதுரை ஜூன்
மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி பகுதியில் மலை மேல் அமைந்துள்ள சீரடி சாய்பாபா மலைக்கோயிலில், திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் தலைமையில் சிறப்பு யாக வேள்வி மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள பாரம்பரிய தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் வேல் வைத்து சிறப்பு யாக வேள்வி நடத்தப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வரும் ராம ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆன்மீக உணர்வும், சமுதாய நலப் பணிகளும் இணைந்த இந்த நிகழ்ச்சி பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள்,
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையின் பெருமையை உலக அரங்கில் எடுத்துரைக்கும் வகையில் அஞ்சல் தலை வெளியிட்ட இந்தியப் பிரதமருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்தின் ஆன்மீக மற்றும் பண்பாட்டு பாரம்பரியங்கள் பாதுகாக்கப்பட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது பல ஆண்டுகளாக பக்தர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. “தமிழக முதல்வராக பதவியேற்கும் முன்னர் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு,வேல் சமர்ப்பித்து தரிசனம் செய்த ஜோசப் விஜய், ஆன்மீக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தலைவர் என்பதால், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான கோரிக்கைக்கும் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
அதேபோல், 63 நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அவர்களின் ஜென்ம நட்சத்திர தினத்தை முன்னிட்டு வரும் ஜூன் 20, 2026 அன்று திருவண்ணாமலை ஆதீனம் மடத்தில் “சைவ சித்தாந்த மாநாடு – 2026” சிறப்பாக நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர் என்றும் கூறினார்.
உலக யோகா தினமான ஜூன் 21-ஐ முன்னிட்டு, உலக மக்களின் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் ஆன்மீக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் திருவண்ணாமலை ஆதீனம் மடத்தில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகளாகிய நான் மற்றும் சமூக ஆர்வலர் ராம. ரவிக்குமார் ஆகியோர் இணைந்து கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை வரும் ஜூன் மாதம் 25-ஆம் தேதி நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.
இந்த நடைபயணம் மூலம் பக்தர்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பாரம்பரிய கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான அனுமதியை பெற முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றனர்.
