
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பதவி விலகக்கோரி மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் மேயரை முற்றுகையிட்டதால் பரபரப்பு..!
மதுரை ஜூலை 29
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு தொடர்பாக மேயர் இந்திராணி பதவி விலக வேண்டும் என, மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து மேயரை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினமா செய்த பின்னர் மாநகராட்சியின் முதல் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடைபெற்றது. ஆணையாளர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் சோலைராஜா தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.
மேயர் தீர்மானங்களை வாசிக்கத் ஆரம்பித்த உடன், மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித்தலைவர் அதிமுக கவுன்சிலர்கள், சொத்துவரி முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மேயர் இந்திராணி பதவி விலக வேண்டும் என கோஷமிட்டனர்.மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா பேசுகையில், ‘சொத்துவரி முறைகேட்டுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ரவி, மேயரின் நேர்முக உதவியாளராக இருந்த பொன்மணியின் கணவர். அதனால், மேயரையும் இந்த விவகாரத்தில் விசாரிக்க வேண்டும் என பேசினார். அதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ‘உங்கள் ஆட்சியில்தான் மாநகராட்சியில் அதிகம் முறைகேடு நடந்துள்ளது, உங்கள் முன்னாள் அமைச்சரையும், முன்னாள் மேயரையும் விசாரிக்க வேண்டும்.’ என எதிர்ப்பு கோஷமிட்டனர்.
தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள், மேயரை நோக்கிச் சென்றனர். அவர்களை பார்த்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்ததால், இரு தரப்பினரிடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேயர் இந்திராணி இந்த மாமன்றம் அரசியல் செய்வதற்கான இடமில்லை. உங்கள் அரசியலை வெளியே போய் வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் பிரச்சினைகளை பேசுவதாக இருந்தால் மட்டும் இருங்கள், இல்லையென்றால் வெளியே செல்லுங்கள்.’ என்று கூறி சபை காவலர்களையும், போலீஸாரையும் அழைத்து அவர்களை வெளியே அனுப்பும்படி உத்தரவிட்டார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேயரிடமும் சிறிதுநேரம் வாக்குவாதம் செய்த அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றனர். அதற்கு மேயர் இந்திராணி, ‘ரொம்ப நன்றி, போய் வாருங்கள் என கூறினார்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.
